கட்டியம்

சண்ட பிரசண்ட விதண்ட மூதண்டகோ
தண்டபாணிக்கு மருகன்
தத்திமித்தால் மோடொத்து நின்றாடிய
சதாசிவம் பெற்ற முருகன்
தண்டமிழ் நிறைந்திடும் அன்றும் முனிவரும்
தான் வணங்கிய வேலவன்
சாலோக சாமீப சாரூப சாயுச்ய
சகல மோட்ச அதிகார கர்த்தன்
அகாதெப்படியென்றால்
ஐங்கரற்கிளைய ஆறுமா முகவன்
ஈஸ்வரி புதல்வன் ஈராறு புயத்தோன்
வள்ளி தெய்வானை மனமகிழ் கொழுநன்
சேவற் கொடியோன் சிகிவா கனத்தோன்
கருணா கடாக்ஷ வீட்சண்ணிய அலங்காரன்
உத்தண்ட மண்டலீகரன்
மதன் மோகன வசீகரன்
பஞ்ச பாண அவதாரம்
அஷ்ட ஐஸ்வர்ய சம்பன்னன்
அஷ்ட நிகர சிஷ்டபரி பாலன்
மந்தரமாகா மாணிக்க மகுடாலங்கரான்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்
ஆபத் பயந்தவன் அனாதைரட்சகன்
அனந்தகோடி அண்டங்களும் இருநூற்று இருபத்து நாலு புவனங்களும் சப்தசாகரஞ் சூழ நின்ற
ஈரேழுபதினாலு லோகமும் காக்கும் வேலையே கைக்கொண்டு ஏகசக்ராதி பத்தியஞ் செலுத்தி ஒப்பற்ற சுந்தரவட்டக் குடையின் நிழலிருந்தருளப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ சிவசுப்பிரமணிய கடவுள் அன்னதானம், சொர்ணதானம், கோதானம், பூதானம் எனும் பற்பல தானங்களும் வழங்கி இன்றைய தினம் (ஊர் பெயர்) வாழ் அனைவரையும் அருள்புரிந்தோம் என்றும் ஆள்கிறோமென்றும் தீர்த்தப் பிரசாதம் திருநீறு கொடுத்துப் பாவையராட பல்லிய முழங்க நாவலர் போற்ற நல்விருதுடனே குவலயம் புகழும் விண்ணளவோங்க எண்ணிலா வணிகர் பொன்னினாற் செய்த புனித மண்டபத்திற் நவரத்தினமும் நனிபெற இழைத்த தமது இரத்தின சிம்மாசனக் கொலுவிற்கு இதோ எழுந்தருளி வறுகிறார் வெகுபராக் எச்சரிக்கை
(குறிப்பு : (காரையம்பதியில்) எந்த ஊரில் கட்டியம் சொல்லுகிறோமோ அந்த ஊரின் பேரைச் சொல்ல வேண்டும்)
ஸ்ரீ சண்முகநாதன் திருவடி சரணம்